என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரஜினிகாந்த் அரசியல்"
தூத்துக்குடி:
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அதற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்குவார். சட்டமன்ற தேர்தல் வரும்போது, தமிழகம் முழுவதும் அவர் மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு, மக்கள் ஆதரவோடு ஆட்சி நாற்காலியில் அமருவார் என்று நம்புகிறோம்.
என்னை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க.வுடன் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு கிடையாது. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசியம் இருந்தால், ரஜினிகாந்த் அரசியலுக்கு உள்ளேயே அடியெடுத்து வைக்கமாட்டார்.
அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு மிக முக்கியமான காரணமே கடந்த 50 ஆண்டுகளாக 2 திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் சமூகம் பாழ்பட்டு விட்டது. அதைத்தான் அவர் சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறி உள்ளார். சிஸ்டத்தை கெடுத்தவர்களோடு எந்த நிலையிலும் ரஜினிகாந்த் ஒன்று சேர்ந்து நிற்க மாட்டார். இது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தில் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளனர். 48 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த மணிமண்டபத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு இன்று 48-வது நாளில் மண்டல அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.
அங்கு பத்திரிக்கையாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:-
எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இதில் சாதுக்கள், சன்னியாசிகள், பொதுமக்கள், பக்தர்கள், ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மணிமண்டபத்தை பார்க்க ரஜினிகாந்த் வருவார். அவர் தற்போது மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் இங்கு நடக்கும் நிகழ்வை அடிக்கடி போனில் கேட்டுக்கொண்டும், வீடியோவில் பார்த்துக் கொண்டும் உள்ளார்.
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்.
ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள். தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்த் மே 23-ந்தேதிக்கு பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படும் நிலையில் திருச்சியில் மாநாடு நடத்தி அதை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. திருச்சி அருகே கட்டப்பட்டுள்ள அவரது பெற்றோர் மணி மண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருகை தர உள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கூறியது இதையொட்டி தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் தான் தீவிர கவனம் செலுத்தப் போவதாக ஏற்கனவே பல தடவை கூறி விட்டார்.
தமிழக சட்டசபையின் பதவிக் காலம் 2021-ம் ஆண்டு வரை உள்ளது. எனவே இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் அரசியலில் நிதானமாக காலடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ள ரஜினி, திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தியபடி உள்ளார்.
தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி பெரிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று முன்பு கூறப்பட்டது. குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவார் என்ற மாயை உள்ளது. ஆனால் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா இன்று அதற்கு விடை அளித்துள்ளார்.
பிள்ளையார்பட்டி ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த அவர் வழிபாடுகள் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ரஜினியின் புதிய கட்சிக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய கடமைகள் காத்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது.
இவ்வாறு ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா கூறினார். #Rajinikanth #SathyaNarayana
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியவர் அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கையும், பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்ட நிலையில் ரஜினி பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் ரஜினி விடுத்த அறிக்கையில் ‘சட்டமன்றமே நமது இலக்கு. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. நதி நீர் பிரச்சினை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்’ என்று கூறி இருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததாக கூறப்பட்டது.
ரஜினி மன்றத்தில் இருந்து விலகிய அவர் கிருஷ்ணகிரி தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளரும் பேட்டியாக அளித்தார்.
இந்நிலையில் இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. அதில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணவேண்டும் என உறுப்பினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் மக்கள் மன்ற தலைவரின் அறிவிப்பின்றி எந்த கூட்டமோ, போராட்டமோ நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rajinikanth #rajinikanthpolitics
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை அறிவித்தார்.
கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மாநிலம் முழுக்க அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டாக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ரஜினி கட்சி தொடங்கி போட்டியிடுவார், அல்லது யாருக்காவது தனது ஆதரவை தெரிவிப்பார் என எதிர்பார்த்தனர். முக்கியமாக ரஜினி பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். ரஜினி போட்டி இல்லை என்று கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினி திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் என்ன என்பது விவாதமாக மாறி இருக்கிறது. ரஜினி முடிவின் பின்னணி பற்றி நிர்வாகிகளிடம் கேட்டோம்.
‘இப்போது என்ன முடிவு எடுத்தாலும் அது பிற கட்சிகளுக்கு ஆதரவாக சென்று விடும், எதிர்காலத்தில் கட்சி தொடங்கும்போது அது நம் கட்சிக்கு பாதகமாக போய்விடும் என்று ரஜினி நினைக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினியின் பேச்சில் அது எதிரொலித்தது. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கடந்த ஓர் ஆண்டாக தன்னை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அவரை பாதித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விஷயத்தில் அவர் கூறியது முதல் பா.ஜனதா 4 மாநிலங்களில் அடைந்த தோல்வி வரை ரஜினியின் கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டன.
தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரஜினியை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் ரஜினியை முக்கிய நபராக பார்த்தாலும் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பில் இன்னும் ரஜினிக்கு முழு திருப்தி வரவில்லை. இன்னும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பூத் கமிட்டிகள் வலுவாக அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
நேற்றைய கூட்டத்தில் கட்சி தொடங்கினால் இந்த தேர்தலிலேயே நம் பலத்தை காட்டலாம் என்று மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
ரஜினியோ இப்போது கட்சி தொடங்கி போட்டியிட்டாலோ ஆதரவு தெரிவித்தாலோ சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது ஏற்படும் பாதகங்களை பற்றி பேசி இருக்கிறார். இந்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் நிச்சயம் 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்காது. தமிழக தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெளிவாக தெரியும்.
கமல்ஹாசன் மற்ற அரசியல் கட்சிகள் போல் கூட்டணி, பணத்தை நம்பாமல் போட்டியிடுவது நம் எதிர்காலத்தை கணிப்பதற்கான நல்ல வாய்ப்பு. நாமும் போட்டியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். இப்போது கட்சி தொடங்கினால் இன்னும் 3 ஆண்டுகள் தாக்கு பிடிக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினால் போதும். அதுவரை அமைதியாக கட்சிக்கான கட்டமைப்பை பலமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதுதான் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்ல ஒரே வழி என ரஜினி கருதுகிறார்.
ரஜினியை பொறுத்தவரை இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சியையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. முக்கியமாக ஆளுங்கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. போட்டியோ ஆதரவோ தெரிவித்தால் நிச்சயம் பகைத்துக்கொள்ள வேண்டி வரும். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமக்கு சாதகமாக அமையும் என ரஜினி தெளிவாக திட்டமிடுகிறார்’ என்றனர்.
ரஜினியின் வாக்குகள் எங்கே போகும்? என்று கேட்டதற்கு ‘ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் தான். எனவே அந்தந்த கட்சிகளுக்கு தங்கள் விருப்பப்படி வாக்கு அளிப்பார்கள். கட்சி தொடங்கும் வரை இப்படியே தொடர்வார்கள்.
ரசிகர்களிடம் எந்த குழப்பமும் இல்லை’ என்று பதில் அளித்தனர். நிர்வாகிகள் இப்படி கூறினாலும் ரசிகர்களிடம் ஒருவித குழப்பம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி தனது ஆதரவை நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தெரிவிப்பார். அந்த கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கின்றனர்.
ரஜினியின் இந்த முடிவை வைத்தே ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுப்பதில் அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. நிர்வாகிகளுக்கு ஆங்காங்கே பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக கூறி சரியாக ஓராண்டு முடியப் போகிறது.
ஆனால் இன்னமும் அவர் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவரது கைவசம் சில சினிமா படங்கள் இருப்பதால், தற்போது அவரது முழுக் கவனமும் அந்த படங்களை முடித்துக் கொடுப்பதிலேயே உள்ளது.
இதற்கிடையே ரஜினி தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக “ரஜினி மக்கள் மன்றம்” எனும் அமைப்பை உருவாக்கி உள்ளார். 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் ரஜினி மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு வேலைகள் நடந்தாலும் ரஜினி தனது புதிய அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரஜினி கட்சியின் டி.வி. சேனல் பெயரை முறைப்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும் கடந்த மாதம் 9-ந்தேதி “டிரேடு மார்க் ரிஜிஸ்டிரார்” அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதில் ரஜினி கட்சி டெலிவிஷனுக்கு மூன்று பெயர்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நடிகர் ரஜினியும் “டிரேடு மார்க்”கை பதிவு செய்யும் அதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் கொடுத்து உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “சென்னை அண்ணாநகர் கிழக்கு என் பிளாக் லோட்டஸ் காலனியில் வசிக்கும் வி.எம். சுதாகர் எனது பெயரில் டெலிவிஷன் சேனல் தொடங்க விண்ணப்பித்துள்ளது தொடர்பாக இந்த கடிதம் தருகிறேன். சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. பெயர்களை பயன்படுத்த எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறி உள்ளார்.
மேலும், “அந்த சானலில் எனது புகைப்படம், லோகோ, லேபிள் போன்றவற்றை பயன்படுத்தவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனவே சுதாகர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தனது கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் கடிதத்தை தொடர்ந்து விரைவில் தடை இல்லா சான்றிதழ் வழங்குவார்கள் என்று தெரிகிறது. என்றாலும் ரஜினி கட்சியின் டி.வி. சேனல் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய தகவல்களை ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பெரும்பாலான தமிழக கட்சிகள் தங்களுக்காக டி.வி. சேனல்கள் வைத்துள்ளன. அதன் மூலம் அந்தந்த கட்சி தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ரஜினி கட்சிக்கும் டெலிவிஷன் சேனல் வரும்பட்சத்தில் அதில் ரஜினி தொடர்பான தகவல்களை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட முடியும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். #Rajinikanth #SuperStarTV
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தனது அரசியல் வருகை பற்றி பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ரஜினி, "அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்" எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-
தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள்.
ஆனால் அவர்கள் தங்களது திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டார்கள். எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை. தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப்பெறுவதை விட இது மிகவும் முக்கியமானது.
மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும்.
கமலுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை. எனக்கும் அவருக்கும் போட்டி கூட இல்லை. அவர் ஒரு நல்ல நண்பர். அவர் எனக்கு நிறைய இடங்களில் உதவி இருக்கிறார். அவர் இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியில் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical #PMModi
நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- வளர்ந்துவரும் காலங்களில் பிற நடிகர்களின் கட் அவுட்களை பார்த்து உங்களுக்கும் கட்-அவுட் வைக்கும் கனவுகள் வந்ததா?
பதில்:- ஆமாம். ஆனால் அவை நிஜமாக மாறும்போது பெரிய மகிழ்ச்சி இல்லை. எப்போதுமே கனவாக இருப்பது நிஜமாகும் போது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். கல்யாணத்தையும் சேர்த்து. எல்லாமே மாயை தான்.
கே:- 2.0 படத்தில் ரோபோவில் ஸ்டைல் கொண்டு வந்தது எப்படி?
ப:- எல்லா பெருமையும் ஷங்கரையே சேரும். நல்லவேளை என்னோட நல்ல நேரம் அவர் நடிப்பு பக்கம் வரவில்லை. அவரது கடின உழைப்பு தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை. ஸ்டைல் பண்ணவேண்டும் என்று நான் இப்போது எதையும் செய்வது கிடையாது.
கே:- மக்களிடம் உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை எப்படி உருவாக்குகிறீர்கள்?
ப:- (மேலே கையை காட்டி) ஆண்டவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
கே:- நீங்கள் சாதாரண நபர் இல்லை என்பதை உணர்ந்தது எப்போது?
ப:- திடீர் என்று பணம், புகழும் வந்தது. அப்போது நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. பின்னர்தான் எல்லாமே நேரம் என்று உணர முடிந்தது. 60களில் நடிக்க வந்திருந்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்பு நம்மால் நிலைத்து நின்று இருக்க முடியாது. இந்த உண்மை புரிந்தபிறகு இயல்பாகி விட்டேன்.
கே:- எந்த கதாநாயகனுக்காகவாவது முதல் நாள் முதல் காட்சிக்கு சிரமப்பட்டு பார்த்தது உண்டா?
ப:- பெங்களூருவில் எம்ஜிஆர் படம் ஒன்றுக்கு சவால் விட்டு அப்படி காலை 4.30 மணிக்கு சென்று டிக்கெட் எடுத்து பார்த்து இருக்கிறேன்.
கே:- எந்த விஷயம் உங்களை மிகவும் பாதிக்கும்?
ப:- இல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது.
கே:- கமலை பாராட்டிக் கொண்டே இருப்பது எப்படி?
ப :- கமல் எனக்கு முன்பே பெரிய நடிகராக இருந்தார். நடனம், நடிப்பு உள்பட அனைத்து துறைகளிலுமே அவரை பார்த்து பிரமித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் கமலுடன் ஒரே காரில் பயணித்ததையே பெருமையாக நினைத்து இருக்கிறேன். எப்போதுமே அவரை அந்த இடத்தில் தான் வைத்து இருக்கிறேன். அவரை முந்தியதாக நினைக்கவில்லை.
இவ்வாறு ரஜினி கூறினார். #Rajinikanth #RajiniPolitics
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இன்னமும் அவர் புதிய கட்சியை தொடங்கவில்லை.
கட்சி தொடங்குவதற்கு முன்பு அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அவர் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார்.
ரஜினி மக்கள் மன்றத்திற்கு நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
அவர்கள் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட அதே நேரத்தில் வெளி நாடுகளிலும் இத்தகைய மன்றத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதலில் அமெரிக்காவில் ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து கனடாவிலும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த இரு நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிறைய தீவிர உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மூலம் இணைய தள தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மேலும் சில நாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிடேட், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, கத்தார், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த மன்றங்கள் சார்பில் சமீபத்தில் வாஷிங்டன், லண்டன், அபுதாபி, சார்ஜா உள்பட பல்வேறு நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படும்போது வெளிநாடுகளில் இருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து ரஜினிக்கு பிரசாரம் செய்வது பற்றி இந்த கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். ஏற்கனவே நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக இளவரசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை சேர்த்தும் வருகிறா£ர்.
இந்த நிலையில் தற்போது மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவியும் கலைக்கப்பட்டுள்ளது. மாநில மகளிர் அணி செயலாளர் காயத்ரி துரைசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் சாமுவேல் சர்ச்சில் ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
காயத்ரி துரைசாமி தற்போது தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், சாமுவேல் சர்ச்சில் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மாநில மகளிர் அணி செயலாளர், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகிய 2 பதவிகள் கலைக்கப்பட்டுவிட்டன.
அதே நேரத்தில் தற்போது மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அமைப்பு செயலாளரும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான இளவரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்பு பணிகள், இனி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தினசரி தங்கள் அணிகளின் அமைப்புப் பணி பற்றிய அறிக்கையை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற்று அவர்களின் அறிவுரைபடி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநில இளைஞர் அணி நிர்வாகிகளும், மாநில மகளிர் அணி நிர்வாகிகளும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் அல்லது மாவட்ட செயலாளர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கட்சிப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகிகள் இனி நேரடியாக தலைமைக்கு அனுப்ப முடியாது. அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கீழ் உள்ளனர். அதே போல் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திலும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே சில வாரங்களில் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நம்புகிறார்கள். இது நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்றத்தை பலப்படுத்தும் பணிகளில் இறங்கினார்.
அரசியலில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்காமல் சினிமாவில் கவனம் செலுத்துகிறாரே என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விரைவில் சில அறிவிப்புகள் வர இருக்கின்றன. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பகிர்ந்த தகவல்கள்...
ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு முழுக்க பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் இந்த 30 பேர் இலக்கை எட்ட முடியவில்லை. சில இடங்களில் பொய்க்கணக்கு காட்டி இருந்தார்கள். இவர்கள் மீதுதான் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரஜினி பூத் கமிட்டி விஷயத்தில் அதிக கவனம் காட்டுகிறார். ஒவ்வொரு தெருவிலும் ரஜினி மக்கள் மன்றம் இருக்க வேண்டும் என்று தனது அரசியல் வியூகத்தை அறிவித்த ரஜினிகாந்த், பூத் கமிட்டி என்பதை பலமிக்க கட்சி அமைப்பாகவே கருதியுள்ளார்.
வாக்குச்சாவடி அளவில் அதிகாரப்பூர்வமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கட்சி மற்றும் ஆட்சி சார்ந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும்.
மக்களோடு மக்களாக இருந்து, அவர் சொன்னதைப் போல் ‘காவலர்களாக’ கண்காணிக்கும் பொறுப்பு. பல மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் பூத் கமிட்டி நியமனங்கள் முடிந்துள்ளது. மேலும் சில மாவட்டங்களில் இன்னும் தொடர்கிறது.
இப்போது ரஜினி காந்தைப் பார்த்து மு.க.ஸ்டாலினும் திமுகவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல தினகரனும் தனது கட்சியை பலப்படுத்த பூத் கமிட்டிகள் அமைத்து வருகிறார்.
ரஜினிகாந்த் சில விஷயங்களை ரகசியமாக திட்டமிட்டு வருகிறார். அது உறுதியானதும் விரைவில் அறிவிப்புகள் இருக்கும். முக்கியமாக கட்சிக்கு தனியாக சேனல் (டி.வி.) இருக்கவேண்டும். பத்திரிகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமாக சேனல் ஒன்று இருக்கிறது. பெரிதாக பிரபலமாகாத அந்த சேனலை ரஜினி கையிலெடுத்து தனது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சிக்கு தனியாக பத்திரிகை தொடங்கும் திட்டமும் உள்ளது.
ரஜினி மன்ற நிர்வாகிகள் விஷயத்தில் அடிக்கடி மாற்றங்கள் நடப்பதால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைய இருக்கிறது. அந்த படப்பிடிப்பு முடிந்த உடன் ரஜினி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்.
திமுக, அதிமுக கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அவர் கவனித்து வருகிறார். ரஜினி தான் எதிர்பார்த்த சூழ்நிலை அமைந்து வருவதாக நம்புகிறார். எனவே இன்னும் சில வாரங்களில் கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது. கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.
ரஜினி மன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சின்ன புகார் என்றாலும் எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப்படுகிறார்கள். இது அப்படியே ஜெயலலிதாவின் நடவடிக்கையை போல் உள்ளது. எனவே கட்சி தொடங்கிய பின்னரும் கூட ரஜினி நிர்வாகிகளிடம் இதே கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டீசர் ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவரும் என்று தகவல் வெளியானதால் அன்றைய தினத்தை ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் ஆகஸ்டு 15-ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை-வெள்ளம் என இப்போது தெரிய வந்துள்ளது. “கேரள மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது,” என்று இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. கொடுத்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆட்சியை செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை மற்றும் கொடி இருக்கும் வரை யாரும் அசைக்க முடியாது.
அ.தி.மு.க.வின் எதிரியாக கருணாநிதியைத்தான் அடையாளம் காட்டி சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார்.
காந்தி இடத்தில் கோட்சே படமும், ராமனிடத்தில் ராவணன் படமும் எவ்வாறு வைக்க முடியாதோ அதுபோல எம்.ஜி.ஆர். அருகே கருணாநிதியை வைக்க முடியாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு ஏராளமான தாய்மார்கள் வந்திருந்தனர். அதே சமயத்தில் கருணாநிதி மறைவிற்கு ஒரு சிலரே பெண்கள் வந்திருந்தார்கள். தாய்மார்கள் ஆதரவு எப்போதுமே அ.தி.மு.க.விற்கு தான். மெரினாவில் கருணாநிதியின் சமாதி அமைய மக்கள் ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் மக்கள் அவரை முதல்வராக்கி இருப்பார்கள்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க. அதுபோல திருப்பரங்குன் றம் தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெரும்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏமாந்தது போல், இங்குள்ள மக்கள் ஏமாற மாட்டார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.போசுக்காக எதிரணியினர் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அவரை விமர்சிக்க வேண்டிய சூழல் வரும். வெற்று மாயைகளை மக்கள் நம்பமாட்டார்கள்
இவ்வாறு அவர் பேசினார். #Rajinikanth #karunanidhideath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்